அரியலூர்,
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் நேற்று 2-வது வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன.
வழக்கமாக காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வருவது வழக்கம். நேற்று முழு ஊரடங்கால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதேபோல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தன. வாடகை கார், ஆட்டோக்கள் ஓடவில்லை.
ரெயில்கள்
அரியலூர் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் முக கவசம் அணியாமல் வந்த போது அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர் வழியாக இருமார்க்கங்களிலும் வழக்கமாக செல்லும் பல்லவன், வைகை, குருவாயூர், மங்களூர், மலைக்கோட்டை விரைவு ரெயில்களும், மதுரை- விழுப்புரம், திருச்சி- கடலூர் பாசஞ்சர் ரெயில்களும் சென்றன. பயணிகள் குறைந்த அளவே பயணம் செய்தனர்.
செட்டி ஏரி நுழைவு வாயில் பூட்டப்பட்டது
நகரில் பார்சல் வழங்கும் ஓட்டல்கள், அம்மா உணவகம், மருந்துக்கடைகள், தனியார் மருத்துவமனைகள், பால், பத்திரிகை விற்கும் கடைகள் திறந்திருந்தன. நேற்று காணும் பொங்கலையொட்டி இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காந்தி மார்க்கெட் பகுதிகளில் ஒரு சில கடைகள் பகுதி அளவு திறக்கப்பட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது.
காணும் பொங்கலன்று அரியலூர் நகரின் ஒரே பொழுது போக்கும் இடமான செட்டி ஏரியில் பொதுமக்கள் குவிவது வழக்கம். ஊரடங்கால் செட்டி ஏரியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது.
பிரகதீஸ்வரர் கோவில்
மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை படையெடுத்து வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் வழிபாட்டு தலங்கள் பூட்டப்பட்டன. இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் நேற்று இந்த கோவில் நடை மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், தா.பழூர் ரோடு, திருச்சி ரோடு, விருத்தாசலம் ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் செல்லாமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் சென்ற ஒரு சில வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், தேவையின்றி சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அபராதம் விதிப்பு
இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கிறதா? கடைகள் ஏதேனும் திறந்து இருக்கிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தார் ஆனந்தன் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விளையாட்டு போட்டிகள்
விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மளிகை, காய்கறி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பூட்டப்பட்டிருந்தன. பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் இயங்கவில்லை. மிகவும் அத்தியாவசியமான பால் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. காணும் பொங்கலையொட்டி கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சாலையின் முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு ஊரடங்கு காரணமாக விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.