மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்த அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் தர்மபுரியில் கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்த அ.தி.மு.க.வை வருகிற சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தர்மபுரியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தர்மபுரி,

தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தர்மபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஏ.எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கனிமொழி எம்.பி. பேசுகையில், நாம் ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க. என்ற கட்சியை மட்டுமே எதிர்த்து போட்டியிடுவோம். ஆனால் இந்த தேர்தலில் நமது கொள்கைக்கு எதிராகவும், சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்படும் அதிகாரமிக்க மத்திய அரசுடன் இணைந்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்த அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் நாம் தோற்கடிக்க வேண்டும். தலைவர் கருணாநிதி இறந்தவுடன் அவரது உடலை அண்ணா நினைவிடம் அருகில் வைக்க வேண்டும் என்று நாம் போராடினோம். அதற்காக நீதிமன்றம் சென்றுதான் அண்ணா நினைவிடம் அருகில் இடம் பெற்றோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதை மனதில் வைத்து வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் வருகிற தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து எர்ரப்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கனிமொழி எம்.பி. கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றுவதில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அதியமான்கோட்டை சென்ற அவர் அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வேனில் நின்றபடி தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து தொப்பூர் சென்ற அவர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பல்வேறு குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அ.தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் தர்மபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு பட்டா, முதியோர் உதவித்தொகை ஆகியவை உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. தற்போது ஆட்சி முடிவடையும் நிலையில் புதிய நம்பரை கொடுத்து கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறுகிறார்கள்.

தமிழக மக்கள் இதற்கு மேலும் ஏமாற தயாராக இல்லை. மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தருகிறார் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கருணாநிதி தமிழக மக்களுக்கு இலவச கலர் டி.வி.களை வழங்கினார். பல ஆண்டுகள் கழித்து இப்போதும் அவை நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா மிக்சி, மின்விசிறி ஆகியவை எப்படி ஓடின?. 20 ரூபாய்க்கு எடைக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்க வேண்டிய நிலையில்தான் அவை இருந்தன. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு கடன் உதவி, மானியம், சுழல் நிதி ஆகியவை தேவையான அளவில் வழங்கப்பட்டன.

அதன்மூலம் பெண்களின் பொருளாதார நிலை உயர்ந்தது. இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை. இதனால் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிரட்டலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகி தவிக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசை நம்பி தமிழகத்தில் தொழில் முதலீடுகள் வராததால் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி முடியும் சூழலில் 2000 மினி கிளினிக்குகளை தொடங்கி அதில் டாக்டர்கள் நியமனம் மூலம் தங்களுக்கு லாபம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்கி உள்ளனர். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதன்படி இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்துள்ள குறகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

பின்னர் ஜருகு, நாகர்கூடல் பகுதியில் நடந்த பிரசார கூட்டம், சோமன அள்ளியில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இண்டூரில் தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடல் ஆகியவற்றில் கனிமொழிஎம்.பி. பங்கேற்றார். பின்னர் நேற்று இரவு தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...