மாவட்ட செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 21ந் தேதி திறக்கபட்ட தண்ணீர் டிசம்பர் மாதம் 11ந் தேதி நிறுத்தப்பட்டது. நவம்பர் மாதம் 21ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 11ந் தேதி வரை தமிழகத்துக்கு 0.99 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது இருப்பு உள்ள தண்ணீரை கொண்டு சென்னை வாழ் மக்களுக்கு ஒரு மாதம் வரைதான் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த திங்கட்கிழமை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை கூடுதலாக வினாடிக்கு 180 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு மொத்தம் 1,180 கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து 45 கிலோ மீட்டர்தூரம் பாய்ந்து வந்து கொண்டிருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் மேலும் 107 கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்து சேர உள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 23 அடியாக பதிவானது. 578 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 32 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.