சிவகிரி,
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆங்கில வழிக்கல்வி புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. ராயகிரி இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அசோகன் வரவேற்றார். உதவி ஆசிரியர் நாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
நிகழ்ச்சியில் தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
எல்லோராலும் சின்னையா என்று போற்றப்படும் சிவந்தி ஆதித்தனார், தான் பிறந்த நாட்டுக்கு பல பெருமைகளை கொண்டுவந்து சேர்த்தவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக மாலை பத்திரிகையை ஆரம்பித்தவர். விளையாட்டு துறையில் மிகுந்த அக்கறையும், ஆர்வத்துடன் அனைவரும் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர்தான் சிவந்தி ஆதித்தனார். இந்தியாவின் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியரும் இவர்தான். வாலிபால் விளையாட்டு வளர்ச்சிக்காக தொடர்ந்து தொண்டாற்றியவர் ஆவார். தன்னம்பிக்கை உங்களுக்கு நிச்சயம் தேவை. எதிலும் சேர்ந்துவிடாத நம்பிக்கை தான் முக்கியம். அனைவருக்கும் ஏதாவது ஒன்றில் ஆர்வம் இருக்கும். திறமை இருக்கும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
வெற்றி உங்கள் கையில்
பொதுவாக நமது கல்வி திட்டம் குறித்து மாணவர் என்னிடம் கூறியவிதம் எனக்கு பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தியது. ஒரு புலி, ஒரு பாம்பு, ஒரு மீன், ஒரு கரடி. இத்தனையும் கொண்டு போய் மரம் ஏறச் சொன்னால் என்ன நடக்குமோ, அதனை போன்றது தான் இன்றைய தேர்வு முறையாகும். அதனை போன்று தேவை இல்லாத, விருப்பம் இல்லாத ஆர்வம் இல்லாததை மாணவனிடம் திணிப்பது தான் இன்றைய பாடத்திட்டமாகும். உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய துறையை தேர்வு செய்து, அதில் தன்னம்பிக்கையோடு உழைத்தால் சாதனை புரிய முடியும்.
என்னுடைய தந்தை திரைப்படத்துறையில் வந்து தான், அரசியல் துறைக்கு வந்திருக்கிறார். எத்தனையோ துறைகள் இருக்கிறது. உங்களுக்கு ஆர்வம், விருப்பம், தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும். பொதுவாக ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை படிக்கக்கூடாது என்பார்கள். அதனை நம்பக்கூடாது. உலகத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்ககூடியது புத்தகங்கள் தான். புத்தகங்களை தேடித்தேடி படித்தால் தான் நாம் இந்த உலகத்தை புரிந்துகொள்ள முடியும். அப்துல்கலாம்கள் உருவாக வேண்டும் என்றால் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். வெற்றி உங்கள் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெற்குசத்திரம் இந்து நாடார் உறவின்முறை ராசாமி நாடார் தொடக்கப்பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டார். வழிநெடுக கனிமொழி எம்.பி.க்கு. வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மனோகரன், சிவகிரி செயலாளர் செண்பகவிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவில்
பின்னர் சங்கரன்கோவிலில் நடந்த தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில், மண விழா என்பது ஒப்பந்தம். தி.மு.க.வின் அடையாளம் சுயமரியாதை திருமணங்கள். யாரும் தங்கள் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, அறிவு, சுயமரியாதை தந்த இயக்கம் தி.மு.க.
நீட் தேர்வில் தமிழகத்தின் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் நெல்லை மேற்கு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.