மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு

உத்தரபிரதேச மாநிலத்தை போல தமிழகத்திலும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாராசுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கடைவீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே யாரும் இதுவரை செய்யாத சாதனையாக 60 ஆண்டு காலம் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். நம்முடைய நம்பிக்கைகளை, தனிமனித உரிமைகளை, உணவு பழக்கத்தை, மொழியை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு அசைத்து பார்க்கக்கூடிய நிலை நிலவி கொண்டிருக்கிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். டெல்டா பகுதிகளில் தண்ணீர் இன்றி சம்பா சாகுபடி பொய்த்ததால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராடினர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தலையாட்டி பொம்மை

உத்தரபிரதேச மாநிலத்தை போல தமிழகத்திலும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு தனக்கு விருப்பமான மாநிலத்திற்கு கடனை தள்ளுபடி செய்வதற்கு உதவி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டு விவசாயிகளை சந்திக்க கூட பிரதமருக்கு நேரமில்லை. மத்திய அரசுக்கு தமிழக அரசு தலையாட்டி பொம்மையாக உள்ளது. தமிழகத்திற்கு என்று தனியாக கவர்னரை கூட நியமிக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. மசோதாவில் மாற்றுத்திறனாளிகளின் உதவி உபகரணங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு எதிர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தி.மு.க. திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கும்பகோணம் பெருநகர செயலாளர் சு.ப.தமிழழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஒன்றிய துணை செயலாளர் ரேவதிபாரதிதாசன், முன்னாள் அரசு வக்கீல் திருவேங்கடம், சுவாமிமலை பேரூர் செயலாளர் எஸ்.எம்.எஸ்.பால சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாராசுரம் பேரூர் செயலாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...