பெங்களூரு,
இவரது தலைமையில் தான் கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்து ஆட்சியை பிடித்தது. ஆனால் கொரட்டகெரே தொகுதியில் பரமேஸ்வர் தோல்வி அடைந்ததால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் போனது. தற்போது நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பரமேஸ்வர் தான் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது.
துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் பதவி ஏற்றுள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக உள்ளார். தலைவர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு உள்ளார். அத்துடன் மந்திரி பதவியும் தனக்கு வேண்டும் என்று கட்சி மேலிட தலைவர்களை டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய தலைவர் யார்? என்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளதுடன், நான் துணை முதல்-மந்திரியாகி பதவி ஏற்றுள்ளேன். இதனால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ளது. அதனால் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு புதிதாக பதவி ஏற்கும் தலைவருக்கு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தலைவர் பதவிக்கு வருபவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
டி.கே.சிவக்குமார் தலைவர் பதவியும், மந்திரி பதவியும் கேட்பது பற்றி எனக்கு தெரியாது. கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய தலைவர் யார்? என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார். கட்சி மேலிட தலைவர்கள் யாரை நியமிப்பார்கள் என்பது பற்றி சொல்ல முடியாது. கட்சி எடுக்கும் முடிவுக்கு அனை வரும் கட்டுப்பட்டு நடப்போம். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.