மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் தங்கும் விடுதி பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவியது

கொடைக்கானலில் தங்கும் விடுதி பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவியது. இதனால் நகரில் பல இடங்களில் புகைமூட்டமாக காணப்படுகிறது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மரங்கள், புற்கள், இலைகள் கருகி வருவதால் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அத்துடன் காற்றும் வீசுவதால் தீ பல்வேறு இடங்களுக்கு பரவுவதுடன், அந்த பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் நகரையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

இந்நிலையில் நேற்று பகலில் நகரில் உள்ள எம்.எம். தெரு, பாக்கியபுரம், சின்னப்பள்ளம், அப்சர்வேட்டரி போன்ற பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் தங்கும் விடுதி பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் அங்கு இருந்த மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் போதிய தீயணைப்பு வாகனங்கள் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் லாரிகளை கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் கடும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அத்துடன் அப்பகுதியில் இருந்த மின்சார வயர்களும் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டனர்.

எனவே கொடைக்கானல் பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கூடுதல் தீயணைப்பு வாகனங்களையும், ஊழியர்களையும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குறுகலான பகுதிகளுக்குள் செல்ல சிறிய வகையிலான தீயணைப்பு வாகனங்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...