கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அழகிய நட்சத்திர வடிவிலான ஏரி உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் சார்பில் படகு குழாம்கள் இயங்கி வருகின்றன. இதில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படகு குழாம்களுக்கு படகுசவாரி செய்யும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். மேலும் வழங்கப்படும் பாதுகாப்பு கவசங்களும் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும் ஆபத்தான முறையில் படகில் எழுந்து நின்று செல்போனில் செல்பி எடுக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படகு பயிற்சியில் ஈடுபட்ட 2 பேர் ஏரியில் விழுந்தனர். பாதுகாப்பு கவசம் அணியாததால் படகை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர். இதையடுத்து மற்றொரு படகில் வந்தவர்கள் அவர்களை மீட்டனர். எனவே படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே படகுசவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டாயம் பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ.சுரேந்திரன் உத்தரவிட்டார். இருப்பினும் அது முறையாக கடைபிடிக்கப்படவில்லை.
கொடைக்கானலில் குளுகுளு சீசன் தொடங்கியுள்ளதையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்யவே அலாதி பிரியம் கொள்கின்றனர். எனவே சுறறுலா பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி அவர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்களை வழங்க வேண்டும். மேலும் அவற்றை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் படகில் நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.