ஊஞ்சலூர்
அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மகா மாரியம்மன்
ஊஞ்சலூர் அருகே பாசூர் அடுத்துள்ள பச்சாபாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 27-ந் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது.
3-ந் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால்குடம், தீர்த்தக் குடம், ஆறுமுகக் காவடி, வேல் மற்றும் அக்னி கும்பம் எடுத்துவந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், தேன், தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இரவு மாவிளக்கு பூஜை மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது.
எலுமிச்சை பழம் ஏலம்
4-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பச்சாம்பாளையத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு மறு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. அதை அதே பகுதியை சேர்ந்த கோகுல் ஆனந்தகுமார் என்பவர் ரூ.75 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.