மாவட்ட செய்திகள்

குடவாசல் - நீடாமங்கலத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

குடவாசல் மற்றும் நீடாமங்கலத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குடவாசல்,

குடவாசல்

குடவாசல் தாசில்தார் அலுவலகம் சார்பில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தாசில்தார் தங்கமணி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். தேர்தல் பிரிவு தாசில்தார் வெங்கடேஷ் வரவேற்றார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவில் குடவாசல் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். குடவாசல் அகர ஓகை பாலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளில் சென்று தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம், ஜனநாயக கடமை குறித்தும், வாக்கு அளிப்பதன் நன்மை குறித்தும் கோஷங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை தாசில்தார் வழங்கினார்.

பேரணியில் துணை தாசில்தார் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

நீடாமங்கலம்

அதேபோல நீடாமங்கலத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு தாசில்தார் ஜானகி தலைமை தாங்கினார். இதில் நீடாமங்கலம் நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். பேரணி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.