நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட மேலாண்மை அலகு மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையின்றி காத்திருக்கும் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இதில் மல்லசமுத்திரம் மற்றும் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமபுறம் மற்றும் நகர்புறத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம் அல்லது மோகனூர் சாலையில் உள்ள புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 18ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.