மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா இன்று தொடங்குகிறது

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா இன்று தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகாலத்தில் தான் சதயவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு உலகஅளவில் ராஜராஜசோழனின் பெருமைகள் அறிய செய்யப்பட்டன. இவர்களின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டும் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

முதல்நாளான இன்று காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. பின்னர் திருமுறை அரங்கம் நடக்கிறது. தொடர்ந்து மேடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் நானும், கலெக்டர் அண்ணாதுரை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

கவியரங்கம்

காலை 11 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் கண்ட திருமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாலையில் மங்கள இசை, தமிழிசை அரங்கம், திருமுறை பண்ணிசை, நாதஇசை சங்கமம், திருமுறை இசையரங்கம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் ஆட்சி காலம் என்ற தலைப்பில் கவியரங்கமும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் 4 வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

மாலையில் மங்கள இசையும், அதைத்தொடர்ந்து மங்கள லயநாதம், திருமுறை அரங்கம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசையரங்கம் நடக்கிறது. ராஜராஜசோழனின் நிலைத்த புகழுக்கு காரணம் அரசியல் திறமா? ஆன்மிக வளமா? என்ற தலைப்பில் சுகிசிவம் நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தருமபுரம் இளைய ஆதினம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முன்னிலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் செப்புதிருமேனிகள் வெள்ளி ரிஷபவாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.

விருதுகள்

இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலெக்டர் அண்ணாதுரை, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் துரைக்கண்ணு, சேவூர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், பால்வளத் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதில் மாமன்னன் ராஜராஜ சோழன் விருதுகள் வழங்கப் படுகின்றன. இரவு 8.30 மணிக்கு திரைப்பட நடிகை ஷோபனாவின் பரநாட்டியம் நடைபெறுகிறது.

சதயவிழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.