இட்டமொழி, ஏப்:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வந்தது. அப்போது கூந்தன்குளம் வடக்குத்தெரு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுத்து கொண்டிருந்த கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் மயில்ராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் 96 டோக்கன்களையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவரை மூலைக்கரைப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மயில்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.