பட்டிவீரன்பட்டி :
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 72 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டி 2 முறை நிரம்பி உள்ளது. இந்த நிலையில் நேற்று 3-வது முறயாக அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 550 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை மருதாநதி அணை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், அணை பொறியாளர் கண்ணன் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.