நாகர்கோவில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி கிராமத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளருமான சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறியும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்யக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் நகரக்குழு சார்பில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் ஜீவா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகரக்குழு செயலாளர் (பொறுப்பு) மோகன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நிறைவுரையாற்றினார். இதில் அஸிஸ், கலா, பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.