கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலையில் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு இன்னிசை நிகழ்ச்சி, அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தொழில் அதிபர் எம்.கோபி ஒரு ஜோடி வெள்ளி கொலுசை திருவிழாவை காணவந்த ஒரு சிறுமிக்கு தானமாக வழங்கினார். அதன்பின்பு பூப்பந்தல் வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியாக எடுத்து வரப்பட்டார். அம்மன் பல்லக்கின் முன் நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட யானை மீது புனித நீர் கொண்டு செல்லப்பட்டது. தேர் நிறுத்தப்பட்டிருந்த கீழரத வீதிக்கு இந்த பவனி சென்றடைந்ததும், அம்மன் தேரில் எழுந்தருளினார். தேரில் வைத்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் மூலமும் அபிஷேகம் நடந்தது.
காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்பு மணி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர், தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக மதியம் 12.30 மணிக்கு கீழ ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தொழில் அதிபர் ஜி.மணி சார்பில் கஞ்சி தர்மமும், சிவசேனா சார்பில் அன்னதானமும் நடந்தது.
தேரோட்டம் நிகழ்ச்சியில், மலேசிய மக்கள் கட்சி தலைவர் தனேந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன், முன்னாள் தலைமை கணக்கர் ராஜேந்திரன், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், தொழில் அதிபர்கள் எம்.சந்திரன், எம்.கோபாலகிருஷ்ணன், ஹரிகரன், நோக்கியா பாலகிருஷ்ணன், சிவலிங்கம், நைனார் தேவர், சோனா கண்ணன், என்.ஆர்.எஸ். லாட்ஜ் அதிபர் நீலகண்டபிள்ளை, நைனார் குமார், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா செயலாளர் அனுமந்தராவ், மூத்த நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்த கேந்திர கூட்டுறவு நாணய முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், அங்கிததாஸ், கன்னியாகுமரி செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு தலைவர் நாகேஷ்வரி சந்திரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் தம்பி தங்கம், ஒன்றிய செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாத ஸ்டால் குத்தகைதாரர் ராமச்சந்திரன், தென்குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் எஸ்.பி.பாலன், சகாய சேவியர், பீர் முகமது, ஆவின் தங்கராஜ், திரட்டி முத்து, பகவதி கண்ணு, தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணபெருமாள், வருமான வரி ஆலோசகர் வெங்கட கிருஷ்ணன், திருக்கோவில் வளாக பகவதி அம்மன் சிறு வியாபாரிகள் நல சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் லட்சுமண பெருமாள், பொருளாளர் சுப்பிரமணிய பிள்ளை மற்றும் காந்திஜி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாடசாமி, பொருளாளர் சுரேஷ், திருவாவடுதுறை மடம் தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், பொருளாளர் நாதன், துணை தலைவர் சிவதாணு, விவேகானந்தர் கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜான்சன், சண்முக சுந்தரம், அசோகன், மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் எஸ்.பி.அசோகன், கன்னியாகுமரி மண்டல சிவசேனா தலைவர் குமரி பா.ராஜன், நகர தலைவர் சுபாஷ், தட்சணத்து துவாரகாபதி நிர்வாகிகள் ஆறுமுகம், குமரேசன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டம் நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கன்னியாகுமரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை மண்டகப்படி, சமய உரை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.