திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகேயுள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவி, பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.
அதை பார்த்த முருகன், அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
பின்னர் அந்த மாணவியை அருகில் இருந்த ஒரு குடிசைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று மாணவியை மிரட்டினார்.
இதனால் பயந்து போன மாணவி அழுது கொண்டே வீட்டுக்கு சென்றாள். அவளின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தனர்.
இதையடுத்து மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.
நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் மொத்தம் 21 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி புருஷோத்தமன் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.