மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் வடக்கு–தெற்கு பாதையில் ஏப்ரல் மாதத்திற்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுவது சந்தேகம்

பெங்களூருவில் வடக்கு–தெற்கு பாதையில் ஏப்ரல் மாதத்திற்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

பெங்களூரு

பெங்களூருவில் வடக்குதெற்கு பாதையில் ஏப்ரல் மாதத்திற்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

பெங்களூருவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரையிலும், நாகசந்திராவில் இருந்து எலேச்சனஹள்ளி வரையிலும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான கிழக்குமேற்கு பாதையில் முழுவதுமாக மெட்ரோ ரெயில் ஓடுகிறது.

ஆனால் வடக்குதெற்கு பகுதியை இணைக்கும் நாகசந்திராஎலேச்சனஹள்ளி பாதையில் நாகசந்திரா முதல் சம்பிகேரோடு வரை மெட்ரோ ரெயில் ஓடுகிறது. சம்பிகே ரோட்டில் இருந்து எலேச்சனஹள்ளி வரையில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேஷனல் கல்லூரி முதல் எலேச்சனஹள்ளி வரையில் பணிகள் முழுவதுமாக முடிந்து, அந்த பாதையில் தற்போது மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

ஆனால் அந்த பாதையில் சம்பிகே ரோட்டில் இருந்து நேஷனல் கல்லூரி வரையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் அந்த பணிகள் நிறைவடையவில்லை. இந்த நிலையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்து, ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

ஆனால் அந்த வடக்குதெற்கு பாதையில் ஏப்ரல் மாதத்திற்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. அந்த சுரங்க பாதையில் 3 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சுரங்க பாதை ரெயில் நிலையங்கள் குளிர்சாதன கருவிகள் பொருத்துதல், தானியங்கி நகரும் படிக்கட்டுகளை அமைத்தல் போன்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் மாதத்திற்குள் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக நிறைவடைவது சந்தேகமே என்று அதிகாரிகள் சிலர் கூறினர். பணிகள் முடிவடைய ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். பெங்களூரு தெற்கு பகுதி மக்கள் மெட்ரோ ரெயில் சேவைக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று அவர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.