கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியான கீரமங்கலம், கொத்தமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு, அணவயல், பள்ளாண்விடுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காதணி, திருமண விழாக்கள் மட்டுமின்றி மொய் விருந்துகள் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தனித்தனியாக நடந்த மொய் விருந்துகள் பிறகு 10 முதல் 30 பேர்கள் வரை இணைந்து ஒரே பத்திரிக்கை அச்சடித்து ஒரே விழாவாக நடத்தி மொய் வசூல் செய்து வருகின்றனர்.
இதனால் பலர் வருமானம் ஈட்டினார்கள். இதனால் மளிகைக்கடை, கறிக்கடைகள், காய்கறி கடைகள், இலை, சமையல் தொழிலாளர்கள், மொய் எழுத்தர்கள் என பலருக்கு வியாபாரமும், வேலை வாய்ப்பும் கிடைத்தது.
நிறுத்தப்பட்ட மொய் விருந்துகள்
கீரமங்கலம் பகுதியில் ஆனி, ஆடி மாதங்களிலும், ஆவணி மாதத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, ஆவணம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களிலும் மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று வேகமாக பரவி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் எங்கும் மொய் விருந்துகள் நடத்தப்படவில்லை.
இதனால் மொய் விருந்தை நம்பி வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனால் வியாபாரம், வேலை வாய்ப்பு இல்லாமல் பல குடும்பங்கள் தவித்து வந்தனர்.
மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்த வேண்டிய நபர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் மொய் விருந்து நடத்தாமல் காத்திருந்தனர். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தொடர்ந்து மொய் விருந்துகள் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மொய் விருந்து நடத்தியவர்கள் கூறுகையில், பருவ காலங்கடந்து மொய் விருந்து நடத்துவதால் சுமார் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே மொய் வசூலாகிறது. இன்னும் காலங்கடத்தி மொய் விருந்துகள் நடத்தினால் மேலும் வசூல் குறையுமோ என்ற நிலை உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா பரவினால் மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தினால் மொய் விருந்துகள் பாதிக்கப்படும் என்பதால் இப்போதே விருந்துகளை நடத்த தொடங்கிவிட்டோம் என்றனர்.