மாவட்ட செய்திகள்

கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி

கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பெண் பலியானார்.

கடையம்:

கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பெண் பலியானார்.

கணவருடன் சென்ற பெண்

தென்காசி மாவட்டம் கடையம் திரவியநகர் பூசைத்தான்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுத்துரை மனைவி கமலம் (வயது 65). இவர்கள் 2 பேரும் ஊரில் இருந்து முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மோட்டார் சைக்கிள் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தை கடந்து சென்ற போது நிலைதடுமாறியது. அந்த சமயத்தில் பின்னால் வடகரையைச் சேர்ந்த பதூர்தீன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கமலம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமலம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.