மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

வள்ளியூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே ஆ.திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை மகன் பிரேம் ஆனந்த்குமார் (வயது 41). இவர் வள்ளியூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வள்ளியூரில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வள்ளியூர்- கேசவனேரி ரோட்டில் சென்றபோது, களக்காட்டைச் சேர்ந்த ராஜாராம் (47) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பிரேம் ஆனந்த்குமார், ராஜாராம் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரேம் ஆனந்த்குமார் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். ராஜாராமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.