பண்ருட்டி,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் சிற்பி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு காயத்ரி(17) என்கிற மகளும், வேல்முருகன்(15) என்கிற மகனும் உள்ளனர். காயத்ரி பிளஸ்-2வும், வேல்முருகன் எஸ்.எஸ்.எல்.சி.யும் படித்து வருகின்றனர்.
ஆறுமுகம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு ஆறுமுகம் குடி போதையில் வந்துள்ளார்.
அப்போது அவர் தனது மகள் காயத்ரியிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த லட்சுமி ஆறுமுகத்தை கண்டித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கத்தரிக்கோலால் குத்தினார்
இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ஆறுமுகம், வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து திடீரென லட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.
இதை பார்த்த அவர்களது 2 குழந்தைகளும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் லட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீசில், காயத்ரி தனது தந்தை ஆறுமுகம் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.