மாவட்ட செய்திகள்

சேலையூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் 22½ பவுன் நகை திருட்டு

தாம்பரம், சேலையூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே வேங்கைவாசல் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார். பின்னர் சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

18 பவுன் திருட்டு

அதே அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் ராஜகணபதி (31). இவர், பொன்மார் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரும் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலைக்கு சென்று விட்டார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது யாரோ மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஒரே நாளில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் நகை திருட்டு போன சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.