செய்யாறு,
சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 24). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியில் தனது உறவினரான கணேசன் என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். இவர் செய்யாறு பஸ் நிலையத்தின் அருகில் தனியார் செல்போன் நிறுவன டீலராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தார். அதில் போதிய வருவாய் இல்லாத நிலையில், வேறு பணியை மேற்கொள்ள தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
கடந்த 4-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை கணேசன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் செல்வராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் செய்யாமூர் கிராமத்தில் இருப்பதை அறிந்த கணேசன் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செய்யாமூர் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளி கிணற்றில் செல்வராஜ் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜ் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்துக் கொலை செய்து கிணற்றில் உடலை வீசி இருப்பார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.