அச்சன்புதூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடவிநயினார் அணை அமைந்துள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு, சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் அணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து, முன்குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த மாதம் 28-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை 90 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டிருந்தது.
அணை திறக்கப்பட்ட அன்றே மதகு வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதகு சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து மதகு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மதகு திடீரென உடைந்தது.
இதனால் மதகில் இருந்து கால்வாய் மேல் சாலையில் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாலை முழுவதும் பெயர்ந்தது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை துண்டிக்கப்பட்டது.
சாகுபடிக்காக சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அணைப்பகுதியில் திரண்டு வந்தனர். மேலும் மதகு வழியாக வெளியேறிய தண்ணீர் அங்குள்ள கால்வாய்களில் சென்றதால், அதில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் செங்கோட்டை தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மதகு உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அணையின் மதகு உடைந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.