கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மருதன்வாழ்வு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் இன்பராஜ் (வயது 29). பக்கத்து ஊரான கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் கனகராஜ் (19). கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் மகன் முருகன் (29). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கடம்பூரில் தனியார் காற்றாலை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக வேலை செய்தனர்.
நேற்று முன்தினம் இவர்களுடைய நண்பரின் திருமண விழா கடம்பூரில் நடந்தது. அதில் இன்பராஜ், கனகராஜ், முருகன் ஆகிய 3 பேரும் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கழுகுமலை அருகே மலைப்பட்டியில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை கனகராஜ் ஓட்டிச் சென்றார்.
கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சி பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த இன்பராஜ் எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்த இன்பராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்றதாக கனகராஜை கைது செய்தனர்.