மாவட்ட செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே, 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தற்கொலை

குறிஞ்சிப்பாடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளை எரித்துக்கொன்று, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டை ஆண்டி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும் பண்ணையூர் வளையக்கார தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகள் சிவகாமி(வயது 28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்யாஸ்ரீ(4) என்ற மகளும், தமிழ் அமுதன்(1) என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் சிவகாமி வீட்டில் படுக்கையறையின் ஜன்னல்கள் வெடித்து சிதறியதோடு, உள்ளே இருந்து புகை வெளியேறியது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிவகாமியின் வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே, படுக்கையறையில் சிவகாமி மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது தீ எரிந்து கொண்டிருந்தது. உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர்.

உடனே அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

சம்பவம் நடந்த வீட்டின் படுக்கையறையில் மண்எண்ணெய் வாடை வீசியதாக கூறப்படுகிறது. அதனால் சிவகாமி தனது குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) சுரேஷ், குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சிவகாமியின் வீட்டுக்கு விரைந்து வந்து படுக்கை அறையை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனது கணவரின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட சிவகாமியை விஸ்வநாதன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவகாமி குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிவகாமியின் கணவர் விஸ்வநாதனுக்கும், அவரது அண்ணன் மனைவி உதயாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததை பார்த்த சிவகாமி கணவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடு சென்ற விஸ்வநாதன் சிவகாமியை போனில் தொடர்பு கொண்டு உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நீ செத்துப்போ, நான் வேறு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு மனமுடைந்த சிவகாமி கடந்த 13-ந் தேதி அவரது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது கணவர் திட்டியதை கூறினார். அவரும் மகளை சமாதானம் செய்தார். ஆனால் விஸ்வநாதன் சிவகாமியை மறுபடியும் தொடர்பு கொண்டு நீ இங்கே இருக்க வேண்டாம், வேறு எங்காவது சென்று விடு என்று தொடர்ந்து திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி குழந்தைகளை தீ வைத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளை எரித்துக்கொன்று சிவகாமி தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு 3 பேரின் உடல்களையும் பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகாமி மற்றும் அவரது குழந்தைகளின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிஞ்சிப்பாடி அருகே 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...