மாவட்ட செய்திகள்

பெண்ணாடம் அருகே சோகம், மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

பெண்ணாடம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு சோமேஸ்வரன்(வயது 12), தியானேஷ்வரன்(8) என்று 2 மகன்களும், பிருந்தா(10) என்கிற மகளும் இருந்தார். இவர்களில் பிருந்தா பெண்ணாடத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் அவள் கடந்த 14-ந்தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். அப்போது காய்ச்சலுடன் வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து பாலசுப்பிரமணியன் அவளை சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அவர் காலையிலேயே சென்றதால் அங்கு டாக்டர்கள் இல்லை. இதனால் அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. மீண்டும் அதிகமானதால் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது மகளை பாலசுப்பிரமணியன் சேர்த்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தாள். மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்து இருப்பது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.