மாவட்ட செய்திகள்

பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி இறந்த மாணவனின் உடல் மீட்பு

பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி இறந்த பள்ளி மாணவனின் உடல் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

பொங்கலூர்,

திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் தனசூர்யா (16). இவன் திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவன் தனசூர்யா தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்துகொண்டு பள்ளிக்கு செல்லாமல் திருப்பூர்-தாராபுரம் சாலையில் ஆண்டிபாளையம் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தபோது தனசூர்யாவை திடீரென தண்ணீர் அடித்துச்சென்றது. நீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாத தனசூர்யா நீரில் மூழ்கி உள்ளான். அப்போது உடன் குளித்துக்கொண்டிருந்த மற்ற மாணவர்கள் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்... என்று சத்தம்போட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் தனசூர்யாவை தண்ணீர் அடித்துச்சென்றது. இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். தொடர்ந்து வாய்க்கால் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினம் இரவு வரை மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காங்கேயம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் தனசூர்யா இறந்து பிணமாக மிதந்து வருவதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி மருதைவீரன் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் வாய்க்காலில் மிதந்து வந்த தனசூர்யாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை