மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி வழிப்பறி 2 கொள்ளையர்கள் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே, பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்து கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பி சென்றனர். அந்த 2 கொள்ளையர்களையும் துரத்தி சென்று சுமார் 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செங்கல் சூளை தொழிலாளிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி ரோஸ்மேரி. இருவரும் தென்திருப்பேரை அருகே குரங்கணியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

செய்துங்கநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள் திடீரென்று ரோஸ்மேரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். பதறிப்போன இருவரும் உடனடியாக செய்துங்கநல்லூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் மகாலிங்கம், கோகுல், ஹரிகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் சென்ற முறப்பநாடு சாலையில் வாகனத்தில் துரத்திச் சென்றனர்.

மடக்கி பிடித்தனர்

போலீசாரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினர். ஆனாலும், உத்தமபாண்டியன்குளம் அருகே கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 2 பேரும் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த மைதீன் லெப்பை மகன் புரோஸ்கான் யாசர் (26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாம்சாபுதீன் மகன் அப்துல் பாஸீத் (24) ஆகியோர் என தெரிய வந்தது.

கொள்ளையர்கள் கைது

தனிப்படை போலீசார் அந்த 2 பேரையும் ஆழ்வார்திருநகரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 4 பவுன் சங்கிலியும் மீட்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) லெட்சுமி பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புரோஸ்கான் யாசர், அப்துல் பாஸீத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...