மாவட்ட செய்திகள்

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தலைவாசல் அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பின்பும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பகடப்பாடி பஸ்நிறுத்தம் அருகே பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கோரிக்கை அட்டைகள், காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வீரகனூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 6 மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. இனிமேலாவது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள், உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.