மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயம்

வேடசந்தூர் அருகே நடுரோட்டில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 49). இவர் அ.தி.மு.க. வர்த்தகர் அணி மாவட்ட துணை செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் கருக்காம்பட்டிக்கு கெண்டு வரப்பட்டது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் மீண்டும் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றது. இதை கொடைக்கானல் கான்வென்ட் ரோட்டை சேர்ந்த சகாயம் (34) என்பவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு வேடசந்தூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவு புறவழிச்சாலை வளைவில் ஆம்புலன்ஸ் திரும்பியது. அப்போது ஆம்புலன்ஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் டிரைவர் சகாயத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே விபத்து பற்றி அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டில் கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்சை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.