மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே முந்திரிதோப்பில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை- மதுவை தேடி படையெடுக்கும் பிரியர்கள்

விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி முந்திரிதோப்பில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மதுவை தேடி பிரியர்கள் படையெடுக்கிறார்கள்.

விருத்தாசலம்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்தகங்கள் என்று அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

எனவே மதுபிரியர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். மதுபிரியர்களிடம் இருந்த கையிருப்பு ஏறக்குறைய தீர்ந்து போய்விட்டதால், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவமும் அறங்கேறி வந்தன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, வடக்குத்து பகுதியில் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து உஷாரான, டாஸ்மாக் நிர்வாகம் அந்தந்த பகுதியில் கடையில் இருந்த மதுபாட்டில்களை லாரிகள் மூலம் குடோன்களுக்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

தற்போது, ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு 16 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் இன்றும் மதுபிரியர்கள் கைகளில் மது பாட்டில்கள் புழக்கத்தில் தான் இருந்து வருகிறது. விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் பரூர் செல்லும் சாலையில் முந்திரி தோப்பில் சில தனிநபர்கள் மது பாட்டில்களை சாக்கு பைகளில் கட்டி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் முந்திரி தோப்பை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். எப்படியாது மது குடித்துவிட வேண்டும் என்று கூடுதல் விலை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள். ஊரடங்கு காரணமாக, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் பரிதவித்து வரும் இத்தகைய சூழலில் இதுபோன்று கூடுதல் விலைக்கு மது வாங்கி குடிக்கும் சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், மதுவிற்பனை தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...