மும்பை,
இங்கிலாந்து அதன் அண்டைநாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. அதேபோல கிரிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியதாவது:-
இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் புதியவகை கொரோனா பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த நேரத்தில் அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும். கவனக்குறைவாக செயல்படக்கூடாது, அதேபோல் அச்சமின்றி இருங்கள், பயப்படக்கூடாது. இதுதான் இந்தியர்களுக்கான மந்திரமாக இருக்கவேண்டும்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா தொற்றுநோய் தாக்கத்தால் குறைந்த எண்ணிக்கையிலேயே இறப்புகளை சந்தித்துள்ளது. இதற்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களும், நோயை எதிர்த்து தன்னலமின்றி சேவையாற்றும் மருத்துவர்கள் போன்ற போர்வீரர்களுமே காரணம்.
பசு, கங்கை, கீதை மற்றும் காயத்ரி ஆகிய நான்கையும் பண்டைய காலத்திலேயே இந்தியர்கள் போற்றி உள்ளனர். எனவே பசுக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக உழைப்பவர்களை நான் பாராட்டுகிறேன்.
தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் விரட்டுகிறது என்று நம்புவதால் தான் இந்திய கிராமப்புற மக்கள் மாட்டு சாணம் மற்றும் தண்ணீரை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்துள்ளனர்.
இந்தியாவின் யோகாவை போலவே, மாடுகளின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் உலகம் ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
பசுக்களின் நலனை காக்கும் பணியில் ஈடுபட்ட 31 சமூக சேவகர்களுக்கு கவர்னர் மாளிகையில் நேற்று காவ் பாரத் பாரதி என்ற விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.