மாவட்ட செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போனில் பேசி அழைத்த பிரச்சினையில் நிர்மலாதேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வணிகமேலாண்மைத்துறை பேராசிரியர் முருகன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

நேற்று காலை மீண்டும் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியர் முருகனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட்டு கீதா இந்த மனுவை விசாரித்து, பேராசிரியர் முருகனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து முருகன் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

பேராசிரியர் முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கிய போது அவர் பேராசிரியை நிர்மலாதேவியின் பிரச்சினையில் தொடர்பு இருப்பதை மறுத்தார். போலீசார் அவர் நிர்மலாதேவியின் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய பட்டியலை காட்டியவுடன் மாணவிகளுடன் நிர்மலாதேவி பேசிய பிரச்சினையில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக்கொண்டதோடு பல்கலைக்கழகத்திலுள்ள வேறுசிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசாரின் தொடர் விசாரணையில் பேராசிரியர் முருகன் வேறு கல்லூரி மாணவிகளுடனும் தொடர்புகொண்டு பேசிய விவரம் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் முருகனிடம் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகன் சார்பில் அவருடைய வக்கீல் கோபிநாத் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியனின் நண்பரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பால்மர் என்பவரையும் போலீசார் நேற்று அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி கைதாவதற்கு முந்திய நாள் தன் கணவரின் நண்பரான பால்மரை செல்போனில் தொடர்புகொண்டு மாணவிகள் பிரச்சினையில் தன்னை மிரட்டும் சிலருடன் பேசி சமரசம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பால்மரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இதேபோன்று கிருஷ்ணன்கோவிலைச்சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் பேராசிரியை நிர்மலாதேவியுடனும் அவருடைய கணவர் சரவணபாண்டியனுடனும் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையிலேயே அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குனர் விஜயதுரை நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் வந்த சிறிதுநேரத்திலேயே காரில் புறப்பட்டுச்சென்று விட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை