சிங்கம்புணரி,
சிங்கம்புணரியை அடுத்த எஸ்.வி.மங்கலம், மாதவராயன்பட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பழனிக்குமாரின் வீட்டினுள் 4 வாலிபர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர் கூச்சல் போட்டார். உடனே வீட்டினுள் புகுந்த வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். பழனிக்குமார் வசிக்கும் தெருவின் நாலாபுறமும் திருடர்கள் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட நபர்களை கிராமத்தில் மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் மாதவராயன்பட்டிக்கு வந்த போலீசார், மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வாலிபர்களின் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். பின்னர் போலீசார் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட நபர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பம்பல் மாவட்டம் கஸ்ஸா குன்னூர் பகுதியை சேர்ந்த பச்சூர் மகன்களான காசிம்(வயது 22), முகமது நாசீர்(28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஷசீம் மகன் முகமது ஹீசித்(35), மேமு மகன் சலீம்(22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகளில் சமீப காலமாக வீடு, வீடாக சென்று போர்வை விற்கும் தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அவ்வாறு மாதவராயன்பட்டியில் போர்வை விற்க வந்தவர்களே, பழனிக்குமார் வீட்டில் இல்லாததை அறிந்து திருட முயற்சி செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று வேறு எந்த பகுதிகளிலும் இதுபோன்று திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.