மாவட்ட செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு: மத்திய அரசுடன் தொடர் மோதலால் மாநில வளர்ச்சி பாதிப்பு, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுவை சட்டசபையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நேற்று வெளிநடப்பு செய்தது. மத்திய அரசுடன் தொடர் மோதலால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி பேசியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பை மாநில அரசு மதிக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் தான் மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணக்கம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

கோர்ட்டு தீர்ப்பை மதித்து நியமன எம்.எல்.ஏ.க்களை சபையின் உள்ளே விட்டிருக்கலாம். தொடர்ந்து ஆட்சியாளர்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மாநில அரசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின் சபையை விட்டு வெளியே வந்தார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபையில் இருந்துவெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இது குறித்து ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில மக்களின் நலனுக்காக எந்த ஒரு புதிய திட்டத்தையும் புதுவை அரசு கொண்டு வரவில்லை. விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை சரியாக அணுகவில்லை. இந்த அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இந்த அரசால் உணவு கூட சரியாக கொடுக்க முடியவில்லை. போதிய மருந்துகளும் கையிருப்பு இல்லை. முதியோர் உதவித்தொகை சரியாக வழங்கப்படவில்லை. நலத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை.

நிலைமை இப்படி இருக்க மத்திய அரசுடனும், கவர்னருடனும் ஆட்சியாளர்கள் இணக்கமான சூழ்நிலையில் இல்லை. மத்திய அரசுடன் நல்லுறவில் இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். அதிக நிதியை பெற முடியும். புதுவை யூனியன் பிரதேசம். சிறிய பகுதி. மத்திய அரசுடன் நல்ல உறவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்தவர் தான்.

தற்போது அவர் மத்திய அரசுடன் எதிர்ப்பை கடை பிடிப்பதால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டால் அனுமதிப்போம் என்று முதலில் கூறினார்கள். ஆனால் தற்போது அதன்படி நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறார்கள். இந்த அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் எந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் அதற்கு மத்திய அரசின் உதவி தேவை. கட்சி ரீதியாக வேண்டும் என்றால் மத்திய அரசை எதிர்க்கலாம். ஆனால் அரசின் போக்கால் மாநில வளர்ச்சி தடைபட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையின் உள்ளே அனுமதித்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அதன்பின் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன்பின் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...