தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள், பழவகைகளை மிக எளிதான முறையில் விற்பனை செய்வது குறித்தும் அவற்றிற்கான ஏற்றுமதி வாய்ப்பினை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சித்ரா, சுசீலா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அண்ணாமலை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடி பொருட்களை எளிதாக விற்பனை செய்யவும், காய்கறி, பழங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களின் சங்கிலிதொடர் மேலாண்மை திட்டத்தை ரூ.32 கோடியே 44 லட்சம் மதிப்பில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு மற்றும் அரூரில் பிரதான விற்பனை மையமும், பென்னாகரத்தில் முதல்நிலை பதப்படுத்தும் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
26 சேகரிப்பு மையங்கள்
விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள், பழங்களை சிரமமின்றி பிரதான விற்பனை மையத்திற்கு கொண்டு வர போக்குவரத்து வாகன வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்றுமதியாளர்கள் முதல் உள்ளூர் வியாபாரிகள் வரை அனைத்து வகையான வியாபாரிகளுக்கும் தேவையான தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரே இடத்தில் கிடைக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 142 ஆதார கிராமங்களில் இருந்து 26 சேகரிப்பு மையங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழவகைகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 1,200 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டமும், தோட்டக்கலை பயிர்களின் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து 192 ஏக்கர் அளவில் பரப்பு விரிவாக்க திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை இருமடங்காகவும், வருமானத்தை 3 மடங்காகவும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.