மாவட்ட செய்திகள்

திட்டச்சேரி அருகே காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திட்டச்சேரி அருகே காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி,

திட்டச்சேரி அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் எந்தவித பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது.

அந்த பகுதி மக்கள் பக்கத்துக்கு கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது கோடைக்காலம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.