மாவட்ட செய்திகள்

ஆக்சிஜனுடன் கூடிய 320 படுக்கைகள் தயார்

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 320 படுக்கைகள் தயாராக உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் ஒரு வாரத்துக்குள் தயாராகும் என டாக்டர்கள் கூறினர்.

தஞ்சாவூர்;

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 320 படுக்கைகள் தயாராக உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் ஒரு வாரத்துக்குள் தயாராகும் என டாக்டர்கள் கூறினர்.

அரசு மருத்துவமனை

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 241 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,233 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,606 நபர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனிமை படுத்துதல் மையம் மற்றும் வீடுகளில் தங்கி கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவைகள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. மேலும் தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

ஆக்சிஜனுடன் படுக்கை வசதி

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1,250 ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதும் நிரம்பின. தொற்று பாதித்தவர்கள் ஆக்சிஜன் படுக்கைக்காக சுமார் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடைய 677 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. எனவே, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.இதில், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 320 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆக்சிஜன் குழாய் இணைப்பு வழங்கும் பணியும் நேற்று நிறைவடைந்துவிட்டதால், இப்படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 500 படுக்கைகள் கூடுதலாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இந்த வாரத்துக்குள் முடிந்து தயாராகிவிடும் என டாக்டர்கள் கூறினர்.