மாவட்ட செய்திகள்

சின்னமுட்டம் துறைமுகத்தை படகுகளில் வந்து முற்றுகையிட்ட நெல்லை மீனவர்கள் போலீசார் சமரச பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை படகுகளில் வந்து முற்றுகையிட்ட நெல்லை மீனவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தினமும் அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்பி விடுவார்கள்.

சின்னமுட்டத்தை சேர்ந்த ஒரு சில விசைப்படகுகள் எல்லை தாண்டி நெல்லை மாவட்ட கடல் பகுதியான கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி கடல் பகுதியில் மீன் பிடிப்பதாகவும், இவர்கள் கரைப்பகுதி வரை வந்து மீன்பிடித்து செல்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக மீனவர்கள் இடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு உள்ளது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தக்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மீனவர்கள் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலை சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 150-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தை நோக்கி கடல் வழியாக படகுகளில் வந்தனர். அவர்கள் படகுகளை கடலில் நிறுத்தியபடி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது படகுகளில் கருப்பு கொடிகளும் கட்டியிருந்தனர்.

போலீஸ் குவிப்பு

இந்த போராட்டத்தை தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்தில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கடற்கரையில் திரண்டு நின்ற கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதே சமயம் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி, நாகராஜன், சுடலைமணி ஆகியோர் படகில் சென்று சின்னமுட்டம் துறைமுகத்திற்குள் வர விடாமல் நெல்லை மீனவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மதியம் 12.30 மணி அளவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லை மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த சம்பவத்தால் சின்னமுட்டம் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...