பாலக்கோடு,
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை ஒருங்கிணந்து நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் பாலக்கோடு அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானம், காரிமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் 3 நாட்கள் நடக்கிறது. மின்னொளியில் பகல்-இரவு ஆட்டங்களாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் பாலக்கோடு பகுதியில் இருந்து 48 அணிகளும், காரிமங்கலம் பகுதியில் இருந்து 46 அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கவிழா பாலக்கோட்டில் நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க. தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.டி.தர்மேஷ்குமார், துணை செயலாளர்கள் பிரசாத், செல்வகுமார், நிர்வாகிகள் லோகேஸ் தமிழ்செல்வன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு நகர செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். இன்று (ஞாயிற்றுக் கிழமை) வரை நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3 -ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் 94 அணிகள் பங்கேற்கின்றன.
விழாவில் மாவட்ட அவை தலைவர் தொ.மு. நாகராஜன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், மாநில ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.