மாவட்ட செய்திகள்

பனை மரம் நடவு செய்ய வேண்டும்

பனை மரம் நடவு செய்ய வேண்டும்

தமிழர்களின் அடையாளமான கர்ப்பக தரு என்று போற்றப்படும் பனை மரம் நடவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் அடையாளம்

மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம். தமிழர்களின் அடையாளம் பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் இதன் பயன்களும் மருத்துவ குணங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமாக உள்ள பனை மரம் தமிழகத்தின் மாநில மரமாகவும் விளங்கி வருகிறது. இயற்கையில் தானாகவே வளர்ந்து நிலத்தடி நீர்இருப்பை தக்க வைப்பதுடன் மண்ணரிப்பைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.

இளம் பனைகள் வடலி என்று அழைக்கப் படுகின்றன. 15 ஆண்டுகளில் இருந்து பலன் தரத் தொடங்கும் இந்த மரம் 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளர்ந்து 3 தலைமுறைகளுக்கு பலன் தரக்கூடியது. இதன் ஓலைகள் 2 முதல் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.பசுமை ஓலை சாரோலை என்றும் காய்ந்த ஓலை காவோலை ஓலை என்றும் அழைக்கப்படுகிறது.நமது மண், இலக்கியம், கலாச்சாரம், சமயம், வணிகம், உணவு, வரலாறு மற்றும் திருக்குறளில் இடம் பிடித்த ஒரே மரம் பனைமரம். சித்தர்களின் மருத்துவ குறிப்புகளில் இதன் பயன்பாடுகள் விரிவாக கூறப்பட்டுள்ளது.

வகைகள்

பனையில் ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என 34 வகைகள் உள்ளன.

பனைமரம் உணவு மற்றும் உணவற்ற பொருள்களை நமக்கு கொடுக்கிறது.உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது.இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு பொருள்களாக வடிவம் பெறுகிறது.பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியவை பனையில் இருந்து பெறப்படும் உணவற்ற பொருள்களாகும். ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகளை அளிக்கும் தன்மையுடையது.மேலும் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.அதன்படி ஓராண்டில் ரூ.6 ஆயிரம் வரையிலும் வருமானம் ஈட்ட முடியும்.

உயிரினங்களுக்கு அடைக்கலம்

அடி முதல் நுனி வரை மனிதனுக்கு பயன்படுவது போல் ஓணான், பாம்பு, பல்லி, வவ்வால், குருவி, அணில் பச்சைக்கிளி, மரங்கொத்தி, மைனா, தூக்கணாங்குருவி உள்ளிட்ட எண்ணற்ற உயிரினங்களுக்கும் பனைமரம் அடைக்கலம் கொடுத்து உதவி வருகிறது. தாளிப்பனை என்ற பனை ஓலையில் இருந்து ஓலைச்சுவடி தயாரிக்கப்படுகிறது. முறையாக எடுத்து பக்குவப்படுத்தப்பட்ட பனையோலை 400 ஆண்டுகள் வரையிலும் பயன்படுத்தலாம். இதனால் தான் புலவர்கள், சித்தர்கள் பாடல்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளை எழுதுவதற்கும் அரசர்கள் தூது அனுப்புவதற்கும் பனை ஓலையை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிகளவு வேலை வாய்ப்பினைக் கொண்டதும் குடும்பம் குடும்பமாக முழுநேரமாக ஈடுபட்டு வந்த இந்த தொழில் போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தையிடுதல் முடியாமை, குறைவான வருமானம் உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்து வருகிறது.

அழிவில் இருந்து மீட்க வேண்டும்

நீர்நிலைகள், சாலை ஓரங்களில் கம்பீரத்துடன் காட்சியளித்த பனைமரங்கள் சாலை விரிவாக்கம், நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டதால் அதன் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.அதன் பிறகு நடவு செய்வதற்கும் உள்ள மரங்களை பராமரிப்பதற்கோ முன்வரவில்லை.உடலுக்கு இயற்கை முறையில் சத்துக்களை அளித்து குளிர்ச்சி தருவதுடன் வெப்பத்தையும் தனித்து துவர்ப்பு இனிப்பு கலந்த சுவையான உணவை அளிக்கக்கூடிய பனைமரத்தை அதிக அளவில் நடவு செய்து நமது மாநிலத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.அதுமட்டுமின்றி பனையேற்ற தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கி பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிவதுடன் அதை சந்தைப்படுத்தலுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும்.பனை மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.அதன் பயனாக மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர் இருப்பை சேமிக்கவும் உயர்த்தவும் முடியும்.