மாவட்ட செய்திகள்

புயலால் சேதமடைந்த வீடுகள்- பொருட்களுக்கு இழப்பீடு கோரி மனு கலெக்டரிடம், பொதுமக்கள் கொடுத்தனர்

கஜா புயலால் சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் புங்கனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், புங்கனூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த வாழை, கரும்பு, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளின் கடன்களுக்கு ஜப்தி மற்றும் ஏல நடவடிக்கையை இந்த நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோல் த.மா.கா. விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் அளித்த மனுவில், மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார். சட்டக்கல்லூரி மாணவர் சிவசோழன், சக மாணவர்களுடன் வந்து கொடுத்த மனுவில், தன்னை பெருகமணி பகுதியில் சிலர் தாக்கியதாகவும், தாக்கியவர்கள் மீது பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாறாக தன் மீது பொய் வழக்குகள் போட்டிருப்பதாகவும், போலீசார் மீதும், தன்னை தாக்கிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த மகாமுனி அளித்த மனுவில், தன் நிலத்தை 3 பேர் ஆக்கிரமித்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கூட்டத்தில் அளித்தனர். கூட்டத்தில், மொத்தம் 474 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் ராஜாமணி அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதற்கிடையே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் கஜா புயலில் சேதமடைந்த வாழை மரங்களில் 2-ஐ எடுத்து வந்திருந்தனர். சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தலையில் துண்டை போட்டப்படி கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

கஜா புயலில் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அழகியமணவாளம், சேங்குடி, திருவரங்கப்பட்டி, கடுக்காத்துறை, பாச்சூர், உளுந்தங்குடி, கோபுரப்பட்டி ஆகிய இடங்களில் வாழைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதேபோல் லால்குடி வட்டத்தில் காட்டூர், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, எசனகோரை, பூவாளூர், பின்னவாசல், திருமணமேடு, பம்பரம் சுற்றி, பச்சாம்பேட்டை மயில்ரங்கம், பெரியவர்சீலி, மேலவாளாடி, இடையாற்றுமங்கலம், லால்குடி, கூகூர், சாத்தமங்கலம், கொப்பாவளி, மணக்கால், அரண்மனை மேடு, அப்பாதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான வாழைகள் புயலில் சேதமடைந்துள்ளன. 2 வட்டங்களிலும் 4 ஆயிரம் ஏக்கர் வாழைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏக்கருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...