சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் சுகுமார், இணை இயக்குனர் (வேளாண்மை) செந்தமிழ்செல்வன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணிக்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் மண்ணில்லா பசுந்தீவனம் உற்பத்தி செய்வது குறித்தும், ஊறுகாய் புல் தயாரிப்பு குறித்தும் வீடியோ மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பயிர் காப்பீடு திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இதனால், வங்கிகளில் வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் அவகாசம் கொடுக்காமல் தொந்தரவு செய்து வருகிறார்கள். வேளாண் அதிகாரிகளை கேட்டால், எல்லாம் கொடுத்தாகி விட்டது என சமாளிக்கிறார்கள். எனவே, யார் யாருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். நில அளவையில் குளறுபடி அதிகம் உள்ளது. இதனால், விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். சேலம், ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 உதவி கலெக்டர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
ஓமலூர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தலைவாசல் பகுதிகளில் பூக்கள், பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் நலன்கருதி வாசனை திரவிய தொழிற்சாலை மற்றும் பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரும்பாலான ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
பின்னர் கலெக்டர் ரோகிணி பதில் அளிக்கையில், கடந்த முறை வரலாறு காணாத வகையில் வறட்சி இருந்ததால் கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை தவிர்க்கும் வகையில்தான் பசுந்தீவனம் தயாரிப்பு பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடன்களை திரும்ப செலுத்த வங்கி அதிகாரிகளிடம் உரிய கால அவகாசம் பெற்றுத்தருவது எனது பொறுப்பு. அதே வேளையில் காப்பீடுக்கான தொகையையும் நிச்சயமாக பெற்றுத்தருவேன். அதை பெற்றுத்தரும் வரை மாவட்ட நிர்வாகம் சும்மா இருக்காது, என்றார்.