மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பறிக்காமல் மரங்களிலேயே விடப்பட்ட பிளம்ஸ் பழங்கள்

முழு ஊரடங்கு காரணமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் பறிக்கப்படாமல் மரங்களிலேயே விடப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

முழு ஊரடங்கு காரணமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் பறிக்கப்படாமல் மரங்களிலேயே விடப்பட்டுள்ளது.

பிளம்ஸ் பழங்கள்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் அதிக அளவு விளைகிறது. கொடைக்கானல் வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, நாயுடுபுரம், பேத்துப்பாறை, அடுக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் பிளம்ஸ் மரங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் பழ சீசன் ஆகும். அப்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மேலும் இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவு அனுப்பி வைக்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கும் இந்த பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வியாபாரிகள் வரவில்லை

கடந்த ஆண்டு பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் குறைந்து இருந்தபோதிலும், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பிளம்ஸ் பழங்களை கொள்முதல் செய்வதற்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வரவில்லை. இதன்காரணமாக விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் பிளம்ஸ் பழங்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளனர். தற்போது அவை பறவைகளுக்கு உணவாகி வருகிறது.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இதுகுறித்து கொடைக்கானலை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி கூறுகையில், ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் முதலீடு செய்து பல்வேறு பகுதிகளில் உள்ள பிளம்ஸ் மரங்களை ஒப்பந்தம் செய்து பராமரிப்போம். பின்னர் அதில் விளையும் பழங்களை பறித்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம். கடந்த ஆண்டு பிளம்ஸ் பழங்கள் ஓரளவு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. மேலும் இந்த ஆண்டு அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு காரணமாக பிளம்ஸ் பழங்களை அனுப்ப முடியவில்லை. இதனால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.