விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்ததும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், தொகுதிகளில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியதோடு அவர்கள் தொகுதியில் இருந்து வெளியேறியுள்ளனரா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் வெளியூர் நபர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனரா என்றும் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை
மேலும் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் யாரேனும் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வாகனங்களில் வருகின்றனரா என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளான கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, தாழங்காடு, ஓங்கூர், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாப்பாம்பாடி, மழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.