மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை

நெல்லையில் ஊரடங்கை மீறி மோட்டார்சைக்கிளில் சுற்றியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.

நெல்லை, மே:

நெல்லையில் ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் வெளிய சுற்றியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் காய்கறி, மளிகை கடைகள் திறந்து பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி வெளியே வருவோர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீசார் கண்காணிப்பு

நெல்லை மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியிலும் 23 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரை பிடித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் எழுத வைத்தனர்

இதேபோல் நெல்லையில் நேற்று போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தனர்.

வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அத்தியாவசிய தேவையின்றி வலம் வந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சிலருக்கு நூதன தண்டனையாக தலா 5 திருக்குறள் எழுத உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் தங்களுக்கு தெரிந்த திருக்குறள்களை காகிதத்தில் எழுதி காண்பித்து சென்றனர்.