மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு பலி

கொடைக்கானலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சேதமடைந்த சாலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சேதமடைந்த சாலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
போலீஸ் ஏட்டு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 36). இவர் கொடைக்கானலில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொடைக்கானலில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்சர்வேட்டரி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பழைய அப்பர் லேக் ரோடு பகுதியில் அவர் வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழ விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேதமடைந்த சாலை
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் சேதமடைந்த சாலையால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்சர்வேட்டரி பழைய அப்பர் லேக் ரோட்டில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த வாரம் மோகன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கி பலியானார். அதன்தொடர்ச்சியாக தற்போது அதே சாலையில் சென்ற போலீஸ் ஏட்டுவின் உயிரும் பறிபோய் உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் குண்டும், குழியுமான சாலயை நேற்று சீரமைத்தனர்.
ஒரேவாரத்தில் சேதமடைந்த சாலையால் 2 பேர் பலியான சம்பவம் கொடைக்கானலில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏட்டுவின் உடலை சுமந்த போலீஸ் சூப்பிரண்டு
விபத்தில் இறந்த பாலசுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான மாவுத்தன்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா ஆகியோர் ஏட்டுவின் உடலுக்கு மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என பலர் மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின்போது, ஏட்டு பாலசுப்பிரமணியனின் உடலை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா ஆகியோர் தங்களது தோள்களில் சுமந்து மயானம் வரை கொண்டு சென்றனர். அங்கு ஏட்டு பாலசுப்பிரமணி உடலுக்கு துப்பாக்கியால் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.