கீரனூர்:
மது அருந்தினர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் அப்பகுதியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவர் இதற்கு முன்பு பணியாற்றிய ஆதனக்கோட்டை போலீஸ் சரகத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் இன்பசுரேஷ் என்பவர் தொலைபேசியில், அன்பழகனை தொடர்பு கொண்டு ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மணல் வண்டியை பிடித்து வைத்துள்ளனர். நீங்கள் வந்து மீட்டுத்தர வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தனது மோட்டார் சைக்கிளில் அன்பழகன் அங்கு சென்று கொண்டிருந்தார். பெருங்களூர் அருகே சென்றபோது அன்பழகனை மணல் திருட்டு கும்பலை சேர்ந்த நெய்வேலி இன்பசுரேஷ் (வயது 36), முகேஷ் கண்ணன் (20), மங்களத்துப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (41), மாந்தக்குடியை சேர்ந்த செந்தில் (42) ஆகியோர் மறித்து உள்ளனர். இதையடுத்து அங்கேயே அன்பழகன் உள்பட 5 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
வாக்கி டாக்கி பறிமுதல்
அப்போது போலீஸ் ஏட்டு அன்பழகன் அதிக அளவில் மது குடித்ததால், போதையில் அங்கேயே மயங்கி விழுந்தார். மேலும் அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய 4 பேரும் திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் அன்பழகன் போதை தெளிந்தவுடன் கண் விழித்து பார்த்தபோது, அவரிடம் இருந்த வாக்கி டாக்கி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இன்பசுரேஷ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மணலுக்குள் புதைத்து வைத்திருந்த வாக்கி டாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.